ரமணா… ரமணா !
ரமணா ரமணா ! ரகுவீரா !
ரகோத்பவா ! ராமா !
நஞ்சை உண்டேன், விஷமுறித்தாய் !
காரிருளில் களைத்தேன், கைகளிலே
கருணை விளக்குத் தந்தாய் !
புத்தி தடுமாறினேன்,
புகலிடம் அருளினாய் !
உன் கருணை விழிகளிலே
அண்டத்தைக் காட்டினாய் !
பிண்டமதின் பொருள் உரைத்தாய் !
குரு தட்சிணாமூர்த்தியாய்
மௌன உபதேசம் மொழிந்தாய் !
நின் திருவடித் தாமரைகளில்
சரண் புகுந்தேன் !
நின் தாமரைத் திருவடிகளை
என் சிரசின் மீது வைத்து
அகண்ட பெருவெளி காட்டினாய் !
நின் கருணையை விளக்க
வார்த்தைகளும் இல்லை !
புறத்தே பரவிய ஆற்றலை
நின் அருட்பார்வையால்
என் அகமுகமாக்கினாய் !
அண்டப் பெருவெளியை
இப்பிண்டத்தினுள் காணச் செய்தாய் !
வார்த்தைகளால் அரற்றிய என்னை
நின் மகா மௌனத்தால் தேற்றினாய் !
இனி என் செய்வேன் ஐயா ?
செய்வதற்க்கு ஏதுமில்லை
எல்லாம் அவனே என்றானப் பின்
இனி தனித்துப் புலம்புதல் இயலுமோ !
என்னை கொடுத்து விட்டேன்
என்று சொல்லவும் இனி யாருமில்லை !
இந்த சூன்ய வெளியை
என்னவென்று உரைப்பது !
சரணடைந்தேன்! சரணடைந்தேன் !
என்ற சொல் இருக்கும் வரை
சரண் அடைதல் இல்லை என்று
குறித்துக் காட்டியவனே !
சரணடைந்தேன் என்ற எண்ணத்தினால்
வெட்கித் தலை குனிந்தேன்.
தவறுவது மானுட இயல்பு
சுட்டிக் காட்டுவது ஞானகுருவின் பணி
என்று அருள்விழியால் பேசியவனே !
இதுவரை பேசிய பேச்சுக்கள் அனைத்தும்
அர்த்தமின்றி போனதுவே.
நின் மகா மௌனத்தின்
ஆழ்ந்தப் பொருள் உணர்ந்து
நின் திருவடித் தாமரைகளில்
தலைப் புதைத்தேன் !
அங்கு மண்டியிருந்த புழுதியும், தூசும்
நின் பாத ஒளிப்பட்டதும் பறந்துப் போனதே !
ஏதுமில்லா வெற்றிடம் !
நோக்கமில்லா பார்வை !
வார்த்தை அறியா மௌனம் !
குழந்தை சிரிப்பு !
பல்கோடி சூரியன் தேகத்தில் பிரகாசிக்க,
எனைத் தொடர்ந்து வந்த
கர்ம இருளனைத்தும் விலகியதே!
நின் அருட்பார்வை நங்கூரமெனப் பாய்ந்து,
அலைந்த என் மனத்தை
ஓர் இடத்தில் நிறுத்தியதே !
நின்ற இடமோ அகங்காரத்தின் பிறப்பிடம்
அதன் ஆணி வேரை நோக்கி
ஆழ்ந்துப் போக, அதுவோ ஒன்றுமில்லாததாகி
அண்டப் பெருவெளியில் யாதுமற்று மறைய
எதையும் காணாமல் கரைந்தேன்
அப்பெருவெளியில் !
ஒன்றிலே ஒன்றாக இரண்டென்று ஏதுமில்லை !
அது மனதின் மாய விளையாட்டே !
மாய வலை அறுந்ததும்
மர்ம முடிச்சும் அவிழ்ந்ததே !
நான் என்று நுழைந்தால் கதவடைப்போன் !
யாதுமற்று நின்றால், கருணையோடு
வாரி அணைத்தனன் !
தத்துவம் கடந்தவன்! தலைமேல் ஆடினன் !
தாயெனக் காத்த தயாபரன் !
தயவுடன் வந்தென்னை
தாங்கிக் கொண்டனன் !
தன்னொளித் துலங்க தரணியிலே
தஞ்சம் என்று வந்தோர்க்கு
தயைப் புரிந்தனன் !
அவன் திருவடித் தாமரைகளை
வாழ்த்தி வணங்குவாய் நெஞ்சே !
Leave a Reply