ஸ்ரீ குரு பாடல்கள்

என் அன்பே ! ஆரமுதே ! அணையா விளக்கே !
அணை போட்டும் தடுக்க முடியா பேரின்ப பெருவெள்ளமே !
உன்னடி பணிந்தேன் யான் தினம் தினமே !
என்னை தடுத்தாட்கொள்ள வருவாய் நீ எக்கணமே !

வருவாய் வருவாய் என வழிப் பார்த்தே காத்திருந்தேன் !
இருவிழி நோக இனியும் எனை நீ காத்திட வைத்தல் சரியோ ?
ஒரு மனதாகி நின் திருவடி பணிந்தேன் யான் தினம் தினமே !
கருணை கொண்டு எனை காத்திட வருவாய் நீ இக்கணமே !

என் தாயானாய் , தந்தையும் நீயே ஆனாய் !
உண்மை போதிக்க வந்த மெய்குருவுமானாய் !
என்னை எந்நாளும் காத்திடும் கடவுளும் ஆனாய் !
உன்னை மறவாமல் இருக்க அருள் செய்வாய் !

வழி ஒன்றும் அறியாது திகைத்து நிற்கிறேன் யான்
விழி கொண்டு வழி உரைப்பாய் வித்யாதரனே !
சுழிமுனை வாசல் அது திறந்து பேரொளிக் காணவே
வழி அதனை போதிப்பாய் பொற்தாமரை முகத்தோனே !

திரைகள் பல மறைக்க திணறுகின்றேன்
கரை ஏறும் வழி சொல்வாய் கருணாகரனே !
உரைத்திடுவாய் மீளும் வழியதனை இச்சகத்தே
மறை நான்கும் போற்றிடும் மறைப்பொருளே ! மாயோனே !

மாய இருள் தன்னில் மதி மயங்கி வீழ்ந்தேனே
தூய மனத்தினாய் துயரது போக்க துரிதமாய் நீ வருவாய் !
ஆய கலைகள் அறுபத்து நான்கினுக்கும் அதிபதியே !
போய வினைகள் புகுந்தேன் நின் திருவடி என பாட வைப்பாய் !

அல்லல் பல பட்டு அனுதினம் உனை நினைத்து
எள்ளளவேனும் இடையூறு இல்லா மனத்தினனாகி
கல்லும் கரைய கருணை பொங்கும் நின் முகத்தினை காண
இல்லையென்றொனாது இன்சொல் கூறி எனைத் தேற்றுவாய் !

நேற்று வரை மதி கெட்டு மயக்கமுற்றிருந்தேன்
இன்று முதல் மதி தெளிந்து விதியை வென்றேன் !
என்று எனை காக்க வருவாய் என காத்து நின்றேன்
இன்று என்று சொல்லாமல் வந்து எனை மீட்ட வள்ளலே போற்றி !

You Might Also Like

Leave a Reply