வினைத் தீர்க்கும் நாயகன் !
சக்தியின் பிறப்பிடமே
சகோதரனின் பூரணத்துவமே
சிவனின் ஞானக் கொழுந்தே
சிந்தாமணியின் இருப்பிடமே
அகத்தியருக்கு அருளிய அமுதே
அகவலில் மகிழ்ந்த கற்பகத்தருவே
அன்னைக்கு அருகிருக்கும் அன்பே
ஆசானாய் அருளும் அறிவே
வினைக் களையும் வித்தகா
விதி மாற்றும் மதிக் கொண்டவா
விண்ணவர் போற்றும் ஞானமுதல்வா
விழிக்கனல் மூட்டும் தவத்தின் நாயகா
அவ்வைக்கு அருள் செய்தவா
அணுகியோர் பிணி தீர்த்தவா
அழைத்தோர் மனம் மகிழ்த்த வா
அன்போடு அணைத்துக் கொள்ள வா
தவறிழைத்த ஏழையை மன்னிக்க வா
தடம் மாறிடாமல் தடம் பதிக்க வா
தவக்கனல் மேலேற அருள்புரிய வா
தணித்து நெஞ்சகம் பால் சொரிய வா
தாயாகி எனை அணைத்தாய் போற்றி !
தந்தையாய் எனை காத்தாய் போற்றி !
குருவாகி எனக்கு அருளினாய் போற்றி !
குழந்தையாய் குகனாகி நின்றாய் போற்றி !
வீரக்கழலோனே, வெற்றி தரும் நாயகனே
வினைக்களைந்த கணநாதனே
வீரக்கழலடிகள் போற்றி! போற்றி! போற்றி!
Leave a Reply