முடிவே ஆரம்பம் !
வருவதெல்லாம் இனி வசந்தக் காலமே !
காலமே கண்ணாகி கருத்தொருமித்து இரு !
இரு, இழந்ததை நினைத்துக் கவலைப்படாமல் !
படாமல் பட்டும் தொடாமல் தொட்டும் வாழ் !
வாழு, வகையறிந்து, வருத்தத்தை தொலைத்து !
தொலைத்ததை கண்டுபிடி தொலைத்த இடத்தில் !
இடத்தில் இடராதே, இடி விழுந்தாலும் கலங்காதே !
கலங்காதே, காலம் வீணே கழிந்ததே என்று !
என்றென்றும் உள்ளவன் உன்னை காப்பான் !
காப்பான், கதவடைத்தான் என்று கதறுகிறாய் !
கதறினால் கர்மவினை அது போய் விடுமா ?
விடு …வெறுப்பை, கோபத்தை, பயத்தை, கவலையை !
கவலைப்பட்டு என்ன பயனை அடைந்தாய் ?
அடைவதும் ஒரு நாள் துறப்பதற்கே !
துறப்பது துன்பமா அல்லது இன்பமா ?
இன்பத்தை துறப்பதால் அது துறவாகுமா ?
ஆகும் அனைத்தும் நன்மதி படைத்தால் !
படைத்தல் பழவினையின் விளையாட்டே !
விளையாடு குதூகலமாய், சோர்வின்றி இரு !
இரு சும்மா இரு, சோம்பி இருக்காதே !
இருக்காதே மனதை இருளாக்கிக் கொண்டு !
கொண்டு வந்ததும், கொண்டு போவதும் எதுவுமில்லை !
எதுவுமில்லை என்றறிந்தும் எகத்தாளமிடுகிறாய் !
எகத்தாளம் முடிந்தால், ஏகத்தாளம் கேட்பாய் !
கேட்பாய் இதுவரை கேளாததை எல்லாம் !
எல்லாம் அவனன்றி வேறெதுவும் இல்லை !
இல்லை இனி துன்பம் உனக்கில்லை !
உனக்கில்லை துன்பம் தரும் மறுபிறவி !
மறுபிறவியில் மரணமில்லா பெருவாழ்வு பெறுவாய் !
பெறுவாய் அனைத்தையும் கொடுப்பதற்கே !
கொடுப்பது குறைவிலாது நிறைந்தது !
நிறைந்தது நிறைமனம் பெற்றது !
Leave a Reply