நவசக்தி தாயே சரணம் !
ஸ்ரீ ஆதிபராசக்தியே அன்னையே சரணம் !
உயிரின் மூலத்தை உறைவிடமாய் கொண்டவளே !
சீவனை பிறவிக்கடலில் அமிழ்த்தும் மகாமாயையே !
தாயே தயை புரிவாய் ! பிறவிக் கடல் கடக்க
அருள் புரிவாய் !
நவசக்தி தாயே ! நவ சோதியானவளே !
அனைத்தும் உன்னுள்ளே அடக்கம் !
உயிரின் வித்தே ! வித்தின் உயிரே !
கனவிலிருந்து விழித்தெழச் செய்வாய்
கருணைக் கடலே !
சிவனில் பாதியே ! சீவனின் முழுமையே !
பிறப்பறுக்கும் வித்தை அறிந்த வித்தகியே !
மனமிரங்கி வருவாய் ! கடைக் கண்ணால்
பார்த்து அருள்வாய் !
திருவடிகளில் சலங்கை ஒலி சல சலக்க
உதட்டில் புன்சிரிப்பு கல கலக்க
கண்களில் சூரிய , சந்திர ஒளி பள பளக்க
மென்மலர் பாதங்கள் அடிமேல்
அடி எடுத்து வைக்க
வளையணிந்த கைகளிரண்டும்
காற்றில் அசைந்தாட
திருமார்பில் மேகலைகள் ஜொலி ஜொலிக்க
காதணிகள் அங்கும் இங்கும் நடனமாட
கருத்த கார்முகில் வண்ண கேசம்
அழகிய தோள்களில் அலையெனப் புரள
தங்கத் தேரென அசைந்தாடி , அசைந்தாடி
வருவாய் ! அன்னையே !
கருணையே வடிவாய் ஆனவளே !
இந்த கல்லுக்கும் உயிர் கொடுத்த
கற்பகத் தருவே !
வந்த இடத்தில எனைக் கொண்டு சேர்ப்பாய் !
வழி ஒன்றும் அறியாது
பல பிறவிகளை கழித்து விட்டேன் !
இனியும் தாமதிக்காது தாயே
இச்சீவன் கடைத்தேற
நின் அருள் மழை பொழிவாய் !
தாயே நின்பதம் போற்றி ! போற்றி ! போற்றி !
Leave a Reply