ஏதுமில்லா நிலை !
எந்த நிலையுமில்லா நிலை
இதில் நிலைத்தத் தன்மை
நிலையில்லாத் தன்மை என்று
ஏதுமில்லை.
பவனி வர நினைத்தும்
பல்லக்கு இல்லையெனில்
கடவுளரும் வெளிவர முடியாநிலை .
சூழல் சரியிருந்தால் மட்டுமே
விதை முளைக்கும், துளிர்க்கும், உயிர்க்கும்
விதையின் மரணமே விதி என்றால்,
அதை எதிர்ப்பவர் யார் உளர்?
கொண்டதோ, மீண்டதோ எதுவாயினும்
மீளாதது எதுவோ, அதுவே நித்யம்.
நித்யத்தை தேடி, தேடி
நித்தம் நான் அலைந்தப்பாடு
யார்தான் அறிவார் இப்புவியில்?
ஒருவருமில்லை.
அந்த ஒருவரைத் தேடி அலைவதிலேயே
இருமைப்பட்டு நிற்கிறோம் காணீர்.
காண்பதெல்லாம் உண்மையே ஆயின்
பொய்யிருப்பை புணர்தலும் இயலுமோ?
வாய் இருந்தும் பேசுவோர் யாரும் இலர்.
அந்த உண்மையை உணர்த்த உணர
யாருமில்லாவிடில்
பேதங்கள் தான் மீதமோ?
பேதைகள் தான் நீளுமோ?
அறுப்பட்ட பட்டம் அது
காற்றதன் போக்கில்
பறந்தேச் செல்ல
இயக்குவோரின்றி,
அடிமைத்தளை அறுத்து
வெறும் இயக்கமாய்
பறந்து சென்றதென்ன மாயம் ?
மாயங்கள் யாவும்
மறைந்தேகும் எனில்,
வெட்ட வெளிச்சம் நித்யமாய்
உன் கண்ணில்
ஜீவனாய் பிரகாசிக்கும்.
ஏற்றுவோரும் யாரும் இல்லை
ஏகாந்த தீபம் இது.
இவ்வுண்மை உணர
உருண்டோடியப் பிறவிகளில்,
உருமாறி உழல,
விளைந்தனவோ பற்பல பயிர்கள்.
சிலதைக் கொள்ள,
சிலதைத் தள்ள
இந்த கொள்ளும், தள்ளும்
விளையாட்டும் முடிவுக்கு வர
எல்லையற்ற நிலைவெளியில்
தானே அதுவாய், அதுவே தானாய்
சச்சிதானந்தமே !
சத்குருவின் அருளால்
பாதையும் சுட்டிக் காட்டப்பட,
விலக மனமின்றி
சுழன்றது சில காலம்.
தானே கழன்ற சங்கிலி
அடுத்த அடியை உணர்த்த,
எடுத்த அடியோ மகாப்பிரளயம்
அதில் மக்கிப்போன மரமானேன்.
வேரும், தண்டும், கிளையும், இலையும்
பூவும், காயும், கனியும், விதையும்
முற்றும் புதைந்தே
முழுவதும் காணாமல் போனதே!
காணாததைக் காண
முயலவும் இல்லை.
முயற்சியின்றி, முனைப்பின்றி
தானாய் அமர்ந்திருக்க
அமரத்துவம் கண்டேனே !
காண விழையும் போது மறைந்து
காணாத போது தோன்றும் அதன்
விந்தை தான் என்னே!
விந்தை இது வித்தைப் பலப்புரிந்து
விதிகள் பல படைப்பதைக் காணீர்.
விதியில் விளையாட ஆசையிருப்பின்
விதித்திடுமே பலப் பிறவிகள்.
விதியின் சதிவளை அறுத்து
சங்கு ஊதியப்பின்
சாஸ்வதமானது சாயுஜ்யமானதே !
Leave a Reply